திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் 5வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் 58 வயதான சுந்தர். இவரது 24 வயது மகன் ஆன்மீக சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு தியாகராஜ நகர் 14வது தெற்கு தெரு முக்கில் சர்ச் ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் பைக்கில் வந்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்துவிட்டு இதுபோல் பூணூலை அணிந்து வரக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுந்தர் சார்பில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், உடனடியாக மர்ம நபர்கள் நான்கு பேரின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.
இதையும் படிங்க: "சீசிங் ராஜாவிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இல்லை" - காவல்துறை விளக்கம்!
இதற்கிடையில், திருநெல்வேலி மாநகரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமிற்காக இன்று காலை வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள சுந்தரின் வீட்டிற்கு நேரடியாக சென்று இது குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மத்திய அமைச்சர் எல். முருகன் காவல்துறையினர் இது குறித்து விரைவாக விசாரித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துவிட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், இந்து முன்னணி அமைப்பினரும் சுந்தர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதுகுறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கூறும்போது, ''இச்சம்பவம் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் சனாதான தர்மம், இந்து தர்மத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதன்முறை. இது சாதி ரீதியான தாக்குதல் என்பதைவிட இந்து மதத்துக்கு எதிரான தாக்குதலாக தான் இந்து முன்னணி கருதுகிறது.
திமுக ஆட்சி வந்ததில் இருந்து சனாதன தர்மத்துக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறை இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.