டெல்லி: தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியின் பெயரில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட போது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் அண்மையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனைஅடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன. 29) வந்தது.
அப்போது, மார்ச் 4ஆம் தேதிக்குள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக பொன்முடி சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பொன்முடி அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தேர்தல் வேறு நெருங்குகிறது என்பதால் அவருக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என முறையீடு செய்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவசரம் வேண்டாம். மேல்முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கட்டும். அவர்கள் பதிலளிக்கும் வரை தண்டனையை நிறுத்திவைக்கப் போவதில்லை என்று கூறி இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் - யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு!