சென்னை: பொன்முடி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மக்கள் பிரதிநிதி திட்டப்படி ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி, அன்சாரி போன்றவருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் பொன்முடிக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில். சபாநாயகர் அப்பாவு இன்று (மார்ச் 13) அவசர அவசரமாக விமானம் மூலம் நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதையடுத்து, பொன்முடிக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து, பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று மாலை அல்லது நாளை காலை மீண்டும் அவரை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல், ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இச்சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், பொன்முடி இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பொன்முடிக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது.
இது குறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் கேட்டபோது, “உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி, அன்சாரி போன்றவருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், பொன்முடிக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
அதாவது, அவருக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார். இது போன்ற சூழ்நிலையில், நெல்லையில் இருந்து சபாநாயகர் அப்பாவு இன்று அவசரம் அவசரமாக விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல்? - அமைச்சர் துறைமுருகன் தகவல்!