தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஹைவேவிஸ் மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், இங்கு பாண்டிச்சேரியில் இருந்து பண்டித ஜவகர்லால் நேரு வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எட்டு பேர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.
அப்போது, மலைச்சாலையில் தேயிலைத் தோட்ட வேலைக்கு ஆஸ்டின் என்பவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். அதனைக் கண்ட பாண்டிச்சேரி காராமணி குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் மற்றும் அவரது நண்பர் தர்ஷன் ஆகிய இருவரும், டிராக்டர் வாகனத்தில் செல்ல ஆசைபட்டுள்ளனர். டிராக்டர் ஓட்டுநரும் அதற்கு விருப்பம் தெரிவித்து, மாணவர்கள் இரண்டு பேரையும் டிராக்டரில் அமர்த்தியுள்ளார்.
பின்னர், டிராக்டர் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் வளைவில் தலைகீழாக கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மாணவர் அரவிந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற தர்ஷன் மற்றும் டிராக்டர் ஓட்டுநர் ஆஸ்டின் ஆகியோர் படுகாயம் அடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று, அரவிந்தன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி.. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள்!