புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருசில வாக்குச்சாவடியில் மின்னணு உபகரணங்கள் பழுதானது தொடர்பாக பிரச்னைகள் எழுந்தன. மற்றபடி, எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 மணி நிலவரப்படி, 77.51 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்காளர்கள் காலை 7.00 மணிக்கு வாக்களிக்க ஆர்வத்துடன் வரத் துவங்கினர்.
இதற்கிடையில், புதுச்சேரி அடுத்த வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுல்தான்பேட்டை மவுனியா மண்டபத்தில் வாக்குப்பதிவு மையம் மின்னணு இயந்திரம் வேலை செய்யாத காரணமாக, வேறொரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மின்னணு இயந்திரம் பழுதாகியது. அதனையும் அதிகாரிகள் சரி செய்து வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டு வாக்காளர்கள் மட்டுமே வாக்குப்பதிவு செய்தனர்.
மீண்டும் மின்னணு இயந்திரம் பழுதாகியது. இதனால் அங்கு இருக்கும் கட்சியின் ஏஜென்டுகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மின்னணு இயந்திரம் ஏன் பழுதாகின்றது என அதிகாரியிடம் கேட்டபோது, சரியான முறையில் பதில் அளிக்காததாகக் கூறி, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதே போல், அரியாங்குப்பம் கிருஷ்ணா விருத்தாம்பால் திருமண நிலையத்தில் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது வீட்டு அருகில் உள்ள திலாஸ் பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். முன்னதாக, யமஹா மோட்டார் பைக்கில் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதியானது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். எங்களது அரசு எல்லா திட்டங்களை செயல்படுத்துவதற்கான அங்கீகாரமாக தான் மக்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்" என தெரிவித்தார்.
பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.நமச்சிவாயம் வில்லியனூர் அரசு தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தினார். புதுச்சேரில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில், புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் பிற்பகலில் நெட்டப்பாக்கம் தொகுதி மடுக்கரை அமைந்துள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேட்டி அளித்த அவர், "புதுச்சேரியில் இந்த தேர்தலில் பணம் பலமா? மக்கள் பலமா? என்ற நிலையில் மக்கள் எங்கள் பக்கம் நிற்கின்றனர். நாங்கள் வெற்றி பெறுவோம்" என தெரிவித்தார்.
இதற்கிடையில் மாலை 6.00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஒரு சில வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காத்திருப்பதால் வாக்குப்பதிவு மையங்கள் மூடப்பட்டு உள்ளே இருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்த வரையில் மாலை 7 மணி நிலவரப்படி 77.51 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: "இறுதி வாக்காளர் வாக்கு அளிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும்" - சத்யபிரதா சாகு - SATYABRATA SAHOO PRESS MEET