மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு இருசக்கர மெக்கானிக் பட்டறையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருப்பதி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர்.
அப்போது, இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றில் இளைஞர்கள் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், அதிவேக இரு சக்கர வாகனம் புதிதாக வாங்கப்பட்டதால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விலை உயர்ந்த வாகனங்களில் சைலன்சர் பகுதியை மாற்றி அமைத்து வேகமான முறையில் சப்தம் கேட்குமாறு வடிவமைக்கப்பட்டதும், தடை செய்யப்பட்ட ஹாரன்களை உபயோகித்ததும் தெரிய வந்தது.
மேலும், விதிமுறைக்கு புறம்பாக மாற்றப்பட்ட 13 இருசக்கர வாகனங்கள், ஒரு காரை பறிமுதல் செய்த போலீசார் அனைத்தையும் டிஎஸ்பி அலுவலகம் கொண்டு சென்றனர். இருசக்கர வாகனங்களை வைத்திருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் படிக்கும் மாணவர்கள் என்பதால், அவர்களது விபரங்களை மட்டும் சேகரித்து வைத்துக் கொண்டு மறுநாள் பெற்றோர்களை அழைத்து வந்து, உரிய விளக்கம் அளிக்குமாறு டிஎஸ்பி திருப்பதி உத்தரவிட்டார்.
தற்போது, அதிவேக வாகனங்களை புதிதாக வடிவமைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பைக் ரேஸில் செல்வது போல் வாகனங்களை இயக்கி மாணவர்கள் விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்!