சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபல 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக இன்று (பிப்.08) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் அனைத்து பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிவித்தனர்.
மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இந்த 13 இமெயில்களையும் அனுப்பிய நபர் யார் எங்கிருந்து அனுப்பப்பட்டது அவருடைய ஐபி முகவரி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தலையில் இன்று காலை 11 மணி முதல் தற்போது வரை போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்த ஐபி முகவரியில் இருந்து மெயில் வந்தது என போலீசார் கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கான தொழில்நுட்பத்தை அந்த மர்ம நபர் பயன்படுத்தி உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கீகரிக்கப்படாத தனியார் நெட்வொர்க் மூலமாக இந்த இமெயிலை அனுப்பி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மிரட்டல் விடுக்கப்பட்ட 13 தனியார் பள்ளிகளின் இமெயில் விவரங்களையும் சேகரித்து இருக்க வேண்டும் எனவே அவர் இதனை சேகரிக்க எந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி உள்ளார் என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் உடன் அந்த மெயில் வந்த ஐபி முகவரியை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை தீவிர படுத்தப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் தரப்பில் 505(1)(B), 506/2, 507 ஆகிய மூன்று பிரிவுகளில் ராயப்பேட்டை, பட்டினம்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை; 14 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!