ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளத்தைச் சேர்ந்தவர் மங்கலம்மா (65). சம்பவத்தன்று கேர்மாளத்தில் இருந்து சத்தியமங்கலம் வந்த மங்கலம்மா, திருப்பூர் செல்வதற்கு திருப்பூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.
பிறகு மங்கலம்மா இடம் பிடிப்பதற்காக பணத்துடன் இருந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு தேநீர் அருந்துவதற்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கு வந்து பார்த்தபோது பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மங்கலம்மா பேருந்து வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடனடியாக புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, புளியம்பட்டி உதவி காவல் ஆய்வாளர் ரபீ மற்றும் போலீசார் உடனடியாக புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையத்துக்கு சென்று மூதாட்டி தவறவிட்ட பேருந்து வரும் வரை காத்திருந்தனர்.
இதையும் படிங்க: “தீபாவளி பட்டாசு விற்பனை சுமார் தான்” - தீவுத்திடலில் விற்பனையாளர் வருத்தம்!
அப்போது, பேருந்து நிலையம் வந்த சத்தியமங்கலம் பேருந்தை சோதனையிட்டபோது, அந்த மஞ்சள் பையில் ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி பொருள்கள் இருப்பதை கண்டு சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த பணத்தை மூதாட்டி மங்கலம்மாவிடம் சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஒப்படைத்தார். பணத்தை மீட்டுத் தந்த போலீசாருக்கு மூதாட்டி மங்கலம்மா நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து டிஎஸ்பி சரவணன் கூறுகையில், ''சத்தியமங்கமல் நகர் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளன. இதில் பேருந்து நிலையத்தில் அனைத்து வழித்தடப் பாதையில் சிசிடிவி கேமரா வைத்துள்ளதால், மூதாட்டி பணத்தை தொலைத்த விவரம் தெரிய வந்தது. உடனடியாக சிசிடிவியில் பார்த்தோம்.
அதில் பேருந்து அடையாளம் தெரிந்ததால் உடனடியாக 27 கிமீ தூரத்தில் உள்ள புன்செய் புளியம்பட்டி காவல் நிலையத்துக்கு புகார் அளித்தோம். அதனடிப்படையில், காவல் ஆய்வாளர்கள் கண்ணன், ரீபிக் ஆகியோர் புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் சென்று அங்கு வந்த பேருந்தை நிறுத்தி பணத்தை மீட்டுள்ளனர்'' என அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்