திருநெல்வேலி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் வருமான வரித்துறையினர் தீவிரமாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க அவருடைய நண்பரான பிரபல எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் மாவீரர் என்பவரின் வீட்டு மற்றும் கடையில் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது.
அதன்படி, நெல்லை சந்திப்பு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகம் எதிரே இருக்கக்கூடிய ராஜேஷ் எலக்ட்ரானிக் கடை மற்றும் அம்மன் சன்னதி பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய இரண்டு வீடுகளிலும் மூன்று குழுக்களாக பத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பணம் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என முதல் கட்டமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஏற்கனவே கடந்த வாரம் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீடுகளில் அடுத்தடுத்து போலீசார் சோதனை நடத்தப்பட்டு மது பாட்டில்கள் பரிசு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சோதனை துவங்கியுள்ளது. குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்து நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நீடித்து வருகிறது. நெல்லை தேர்தல் களத்தைப் பொருத்தவரை இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு எதிராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டு இருக்கும் வலுவான வேட்பாளராகவே நயினார் நாகேந்திரன் அறியப்படுகிறார். இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை மூலம் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்துவதால் நயினார் நாகேந்திரன் மீது திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து நேற்று நயினார் நாகேந்திரன் மீது புகார் அளிக்க வந்த திமுக மாவட்டச் செயலாளர் மைதீன்கானிடம் கேட்டபோது அவர் மீது எங்களுக்குப் பயமில்லை உண்மையைத்தான் நாங்கள் புகாராக அளிக்கிறோம் என கூறியிருந்தார்.