மயிலாடுதுறை: வகுப்பு ஆசிரியர் அடித்ததாக தற்கொலைக்கு முயற்சித்த 11ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், பள்ளியின் எதிர்புறம் உள்ள வணிக வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சக மாணவர்கள் இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, ஆசிரியர் மாணவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் மாணவரை பார்த்து கதறி அழுதனர். இந்நிலையில், மாணவனை பார்க்க மருத்துவமனைக்கு வந்த தலைமை ஆசிரியரை, மாணவனின் தாயார் ஆத்திரத்தில் அடித்து தாக்கினார். அப்போது, போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர் கூறுகையில், “கடந்த செவ்வாய்க்கிழமை நான் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனையடுத்து நேற்று முன் தினம் (நவ.06) பள்ளிக்குச் சென்றேன். அப்போது ஆசிரியர் என்னை அடித்து வெளியில் அனுப்பினார். இதனால் நான் தலைமை ஆசிரியரை பார்க்க சென்றேன். அப்போது பேட்ஜ் இல்லை என்று தலைமை ஆசிரியரும் அடித்தார். இதனையடுத்து, நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்."
இதையும் படிங்க: "அப்படியெல்லாம் செய்ய முடியாது".. கொல்கத்தா ஆர்..ஜி.கர் மருத்துவமனை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"இந்நிலையில், நேற்று (நவ.07) வழக்கம் போல் பள்ளிக்கு சென்றேன். அப்போது என் வகுப்பு ஆசிரியர் என்னை தலையில் அடித்து வெளியில் அனுப்பினர். மீண்டும் தலைமை ஆசிரியரை பார்க்கச் சென்றேன். அபோது அவர் எதுவும் கேட்காமல் என்னை அடித்தார். அத்துடன் மற்றோரு ஆசிரியரிடம் கூறி வெளியில் அனுப்ப சொன்னார். இதனால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்," இவ்வாறு மாணவர் தெரிவித்தார்.
இது குறித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி கூறுகையில், “மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் தாக்கியுள்ளனர். மாணவர் செய்யும் தவறினை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் ஆசிரியர் தாக்கியதோடு, கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் மன அழுத்தத்தில் மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பிரச்சினையை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவரை அடித்த வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் மற்றும் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் ஆகியோர் மீது அடித்தல், ஆபாசமாக பேசுதல் 296(b), 115(iii) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்