சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு பொதுமக்களைக் கவரும் வகையில் பல கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தது. வாடிக்கையாளர்கள் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 35 ஆயிரம் ரூபாய் என பத்து மாதத்திற்கு வட்டி தரப்படும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு நிர்வாகிகள் தலைமறைவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர்களான ரூசோ, ராஜசேகர் உட்பட 23 நபர்களைக் கைது செய்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ரூசோ என்பவரை கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்தனர். இதையடுத்து அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த ரூசோ அவர் மேல் இருக்கும் ஆதரங்களை கலைக்க முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
இதனையடுத்து அவருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவரை நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டனர்.
ஆனால், உத்தரவு பிறப்பித்து மூன்று நாள் ஆகியும் அவர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரூசோவை கைது செய்வதற்கு போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படைகள் அமைத்து ரூசோவை தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ரூசோவும் ஒருவர். இவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு 15 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், 3 கோடி ரூபாய் மட்டுமே பெற்றதாகவும் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், ரூசோவை கைது செய்தால் மட்டுமே உண்மைத் தன்மை தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் ரோடு ஷோ; மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!