சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா ஆறாவது தெருவில் உள்ள ஃபஷீலத்துல்ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டை, கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த வீட்டின் வாடகை பணம் 20 லட்சம் ரூபாயை யுவன் சங்கர் ராஜா தராமல் அலைக்கழித்து வருவதாக, வீட்டின் உரிமையாளர் சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, யுவன் சங்கர் ராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்று வீட்டின் உரிமையாளருக்கு அனுப்பப்பட்டது. அதில், தொடர்ச்சியாக தன் மீது அவதூறு பரப்பி வரும் வீட்டின் உரிமையாளர் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும், மேலும் இது சிவில் சம்பந்தமான பிரச்னையை கிரிமினல் வழக்காகக் கொண்டு செல்வதாக குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், தன் மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்து தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், யுவன் சங்கர் ராஜா வாடகை பணம் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், யுவன் சங்கர் ராஜா ஒவ்வொரு மாதமும் வாடகை பணத்தை மொத்தமாகச் செலுத்தி வரும் நிலையில், விஜய் நடித்து வரும் கோட் திரைப்பட பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், படத்தின் ஆடியோ வெளியீடு முடிந்த பிறகு வாடகை பாக்கி மொத்தமாக சேர்த்துக் கொடுப்பதாக யுவன் சங்கர் ராஜா தரப்பில் தெரிவித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அந்த வீட்டை யுவன் சங்கர் ராஜா காலி செய்ய முயன்ற போது வாடகை பணம் தராமல் ஏமாற்றி விடுவார்கள் என அச்சப்பட்டு வீட்டின் உரிமையாளர் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் விளக்கம் கேட்டு போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், இதில் யாராவது தவறு செய்திருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வாடகை பாக்கி? ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்!