ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில்வே கூட்ஸ் ஷெட்டுக்கு சம்சா விற்கும் தொழிலாளி ஒருவர் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் பெண் சிசு ஒன்று அசைவில்லாமல் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து உடனடியாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பெண் சிசுவை வீசி விட்டுச் சென்ற தாய் உட்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலீசார் தெரிவித்ததாவது, ”திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் வைஷாலி நகரைச் சேர்ந்தவர் திவ்யா (32 ). இவர் பட்டாபிராம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது முதல் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திவ்யா அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார்.
அதில் ஒரு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் திவ்யா கர்ப்பம் தரித்துள்ளார். அந்த குழந்தையும் பெண் குழந்தை என்பதை கண்டுபிடித்துள்ளனர். நான்காவதாக பெண் குழந்தை பிறக்கப் போகிறதே என்ற கவலையில் இருந்துள்ளார். ஏழு மாதம் ஆன நிலையில் கருவை கலைக்க முடிவு செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் அரக்கோணம் வந்துள்ளார். அங்குள்ள தனியார் க்ளினிக்கில் குழந்தையை கருக்கலைப்பு செய்து வெளியே எடுத்துள்ளனர். அப்போது குழந்தைக்கு லேசாக உயிர் இருந்துள்ளது. இந்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்து விடும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, குழந்தையை ஒரு பையில் போட்டு பேருந்து அல்லது ரயிலில் ஊருக்கு எடுத்துச் சென்றால் தேவையில்லாத பிரச்னை வரும் என்று நினைத்து, திவ்யாவும் அவரது தாயாரும் ரயில்வே கூட்ஸ் ஷெட் ரோட்டில் மறைவான பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்” என போலீசார் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு! - TET 2014