மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேல் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 132 சாட்சிகளில், இதுவரை 49 சாட்சிகளுக்கு மேல் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ஏற்கனவே 4 முறை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 5 வது முறையாக ஜாமீன் கோரி மனு செய்துள்ளேன்.
இந்த வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் நட்சத்திர சாட்சிகளான காவலர்கள் ரேவதி மற்றும் பியூலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது. எனவே, சட்ட விதிகளின் அடிப்படையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நான் ஏற்கனவே கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.
மேலும், உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், தனது வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும், வேறு எந்த வழக்கும் என் மீது இல்லை. நான் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பில்லை. கடைசி காலத்தில் என் பேரக்குழந்தைகளோடு நேரம் செலவிட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வழக்கு விசாரணை தாமதமாக நடைபெறுவதாக” தெரிவித்தார்.
வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்த சாட்சியத்திடம் இவ்வளவு நாட்களாக குறுக்கு விசாரணை நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மாஜிஸ்திரேட் தன்னுடைய பணிகளை செய்வாரா, இல்லை தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பாரா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, காவல் அய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வீர வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி எப்போது முடியும்? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!