தருமபுரி: தருமபுரி நகர்ப் பகுதியில் உள்ள சேலம் செல்லும் பிரதான சாலையில், மனோகரன் என்பவர் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய வருகின்றனர். நாள்தோறும் காலை முதல் இரவு வரை கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 25) இரவு வழக்கம் போல் விற்பனை முடித்து கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இத்தகைய சூழலில் நேற்று நள்ளிரவு பர்னிச்சர் கடையில் தீப்பிடித்துள்ளது. கடைக்குள் இருந்து புகை வந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தீ கடை முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.
மேலும், பர்னிச்சர் கடைக்குள் பற்றி எரிந்து தீயானது, அருகே அருகே உள்ள இரண்டு வங்கிகள், தனியார் ஸ்கேன் சென்டர், வெள்ளி நகைக் கடை ஆகியவற்றுக்கும் பரவி தீ பற்றியது. தீ அதிகமாகப் பரவத் தொடங்கியதால், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களிலும், நகராட்சி தண்ணீர் வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கு முயற்சியில், நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
ஆனாலும், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் சிறியதாக பற்றத் தொடங்கிய தீ கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடிய சூழலில், தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுமட்டும் அல்லாது, தீப்பற்றி எரிந்த பர்னிச்சர் கடைக்குப் பின்புறம் உள்ள ஏராளமான குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். தருமபுரியில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து தருமபுரிக்கும் வரும் வாகனங்களை காவல் துறையினர் மாற்று வழியாக திருப்பிவிட்டனர். இதனை அடுத்து, சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இதில், சுமார் 5 கோடி ரூபாய் மதிக்கத்தக்கப் பொருட்களும், அருகே இருந்து வங்கியில் பயன்படுத்தப்படும் ஆவணங்களில் சிறிதும் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. மேலும், இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமா, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீவிபத்து ஏற்பட்ட பகுதியை தருமபுரி வட்டாட்சியர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். தற்போது இந்த தீவிபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி நகரில் திடீரென இரவில் நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீடற்ற பழங்குடியினருக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு.. சட்டப்பேரைவையில் வெளியான 19 புதிய அறிவிப்புகள்!