தூத்துக்குடி: தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா (30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் கடந்த மாதம் ஒருவரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். இதனையடுத்து, விளாத்திகுளம் போலீசார் ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்து, தூத்துக்குடி பேரூராட்சி சிறையில் விசாரணைக் கைதியாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், விளாத்திகுளம் நீதிமன்றத்தில் மகாராஜா மீதான கொலை முயற்சி வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மகாராஜாவை ஆஜர்படுத்த பேரூரணி சிறையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசார் 2 பேர் பேருந்தில் அழைத்து வந்துள்ளனர்.
இந்த பணியில் விருதுநகர் மாவட்டம், குருவாயூர்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் சண்முகம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் சுவாதி (21) ஆகியோர் ஈடுபட்டனர். விளாத்திகுளம் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்ததும், பேரூரணி செல்ல தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு கைதியுடன் போலீசார் பேருந்தில் வந்தனர்.
பின்னர் அங்கிருந்து மினிபஸ் ஒன்றில் செல்வதற்காக போலீசார் காத்துக் கொண்டு இருந்த வேளையில். திடீரென போலீசாரைத் தாக்கிய மகாராஜா, கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய்பொடியை போலீசாரின் கண்களில் தூவி, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி டவுண் எஸ்பி கேல்கர் சுப்பிரமணிய பால் சந்த்ரா, வடபாக்கம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் எஸ்ஐ மாணிக்க ராஜா ஆகியோர் ஐகோர்ட் மகாராஜாவுக்கு மிளகாய்பொடி கிடைத்தது எப்படி என விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, அப்பகுதி கண்காணிப்பு பதிவுகளை போலீசார் சேகரித்தனர். இதில் தப்பியோடிய கைதி மகாராஜாவிற்கு மிளகாய்பொடியை அவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் அடையாளம் தெரிந்த நபர் கொடுத்து உதவியுள்ளதும், பின்னர் 2 போலீசாரையும் தாக்கி மிளகாய்பொடியைத் தூவி விட்டு அவர் தப்பி ஓடியது தெரிந்தது.
இந்த சம்பவத்தில் முகம் மற்றும் மூக்கு பாதிக்கப்பட்ட நிலையில் பெண் காவலர் சுவாதி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவம் குறித்து மற்றொரு ஆயுதப்படை காவலர் சண்முகம், தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தப்பியோடிய கைதி ஐகோர்ட் மகாராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். மேலும், அவர் மீது விளாத்திகுளம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, தாளமுத்துநகர் மற்றும் வடபாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு, சூரங்குடி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இதனையடுத்து அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை எம்ஐடி-க்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்தடுத்து வரும் மிரட்டல்களால் பொதுமக்கள் அச்சம்!