வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் கடந்த 22ஆம் தேதி குடியாத்தம் தனியார் கல்லூரி பேராசிரியர் சினேகா (வயது 23) என்பவர் நடுப்பேட்டை காந்தி ரோட்டில் நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சினேகாவின் தங்க செயினையும் மற்றும் அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இது குறித்து சினேகா, காவல் நிலையில் புகாரளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேரின் முகங்கள் பதிவாகி இருந்தது. அதனைக் கொண்டு மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் வாகன தணிக்கையின் போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஹரி (19), முஹம்மத் இம்ரான் (20), முபாரக் (18) ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர்.
பின்னர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடந்த 22ஆம் தேதி தனியார் கல்லூரி பேராசிரியர் செயினை பறித்துக் கொண்டு சென்றது இவர்கள் தான் என்பது தெரியவந்தது. கல்லூர் பகுதியைச் சேர்ந்த அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த பேராசிரியரின் தங்கச் செயின், செல்போன், செயின் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் திருடிய வாகனங்களில் செல்போன் மற்றும் நகைப் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் பேராசிரியரின் தங்கச் செயினை பறித்துச் சென்ற இளைஞர்களை காவல்துறை விரைந்து பிடித்ததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்பதிவு பெட்டியில் போதையில் இளைஞர்கள் தகராறு.. நள்ளிரவில் வாக்குவாதம் - நடந்தது என்ன? - Drunken Youths Atrocity