சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று (ஏப்.30) மாலை 5 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று 70 பயணிகளுடன் புறப்பட்டது. ஏற்காடு வாழவந்தியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயரத்தினம் என்பவர் பேருந்தை இயக்கி வந்துள்ளார். அவர் கொண்டை ஊசி வளைவுகளிலும் வேகமாக பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்படி அவர் வரும்பொழுது 13வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இடது புறம் திரும்பாமல் நேராகச் சென்று கொண்டை ஊசி வளைவு எதிரே உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. 13வது கொண்டை ஊசி வளைவில் விபத்தில் சிக்கிய பேருந்து மலைப்பகுதியில் தடதடவென சரிந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் தலைக்குப்புற விழுந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டனர்.. இந்த தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, காயம் அடைந்த பயணிகள் அனைவரையும் உடனடியாக 10க்கும் மேற்பட்ட 108 அவசரகால ஆம்புலன்ஸ், ஐந்துக்கு மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் நேற்று (ஏப்.30) மாலை முதல் இரவு வரை ஐந்து மணி நேரத்திற்கு மேலாக ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், பேருந்தில் பயணித்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த சிறுவன் முனீஸ்வரன் (10), சேலம் சூரமங்கலம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கார்த்திக் (37), கன்னங்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிராம் (57), ஏற்காடு பி.டி.ஓ. அலுவலகத்தில் கணினி பிரிவில் பணிபுரிந்த சந்தோஷ் (40) மற்றும் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாது (60) ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தற்போது இந்த கோர விபத்து குறித்து, ஏற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஏற்காடு போலீசார் கூறுகையில், "52 சீட் கொண்ட பேருந்தில் 70 பயணிகள் பயணித்துள்ளனர். கூட்ட நெரிசலால் 15க்கு மேற்பட்டோர் கடும் நெரிசலில் நின்றபடி பயணித்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, பேருந்து ஓட்டுநர் வேகமாக ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்துக்குப் பின் உயிர் தப்பிய பேருந்து ஓட்டுநர் ஜெயரத்தினம் ஏற்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளோரில் சிறு சிறு காயங்கள் அடைந்தோர் நேற்று (ஏப்.30) இரவே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவரது இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மற்றும் கை,கால் முறிவு ஏற்பட்ட சிலர் சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: அரசு உடனடியாக நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!