சென்னை : திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த செப்டம்பர் 22ம் தேதியன்று 10ம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் படி பிரச்சனை அனைத்துமே மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்ததால் தொடங்கியுள்ளது. மாணவர்களின் கிண்டல் அறுவெறுக்கத் தக்கதாகவும், ஆபாசமாகவும் இருந்ததால் மாணவி தனது வகுப்புத் தோழிகள் சிலருடன் சேர்ந்து இதனை தட்டிக்கேட்டுள்ளார்.
பள்ளியில் நடக்கும் அத்துமீறல்களை அறிந்த மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகமோ மாணவியின் செயல்பாடுகளை குறைசொல்லியதாக காவல்நிலைய (W14,PS,CSR NO:191/24 ) புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சகமாணவிகளிடம் விசாரித்த போது குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்கள், பல மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து தங்கள் தொலைபேசியில் வைத்திருப்பதும், இதனை மற்ற மாணவர்களுக்கு காண்பித்து பிரச்சனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இவ்வழக்கில் சிஎஸ்ஆர் வழங்கி போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இதில், அந்த விசாரணையில், மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்த மாணவர்கள் பல மாணவிகளின் படத்தை மார்பிங் செய்து சக மாணவர்களுக்கு காண்பித்து வந்ததும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததும் தெரியவந்தது.
உடனடியாக சம்பவம் தொடர்பாக மாணவிகளின் புகைப்படத்தை மார்பிங் செய்த 3 மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.