அரியலூர்: செந்துறை அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (90). இவரது மனைவி வள்ளியம்மை (75). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள முந்திரி தோட்டத்தில் வசித்து வருகின்றனர். பிச்சை பிள்ளை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர்களிடம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி, தோல் நோய்க்கு வைத்தியம் அளிப்பதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர், மாந்திரிகம் செய்வதற்காக வள்ளியம்மை பாட்டியிடமிருந்து அவர் அணிந்திருந்த அரை சவரன் தங்கத் தோடை கேட்டுள்ளார். அதற்குப் பாட்டியும் தங்கத் தோடை கழட்டிக் கொடுத்துள்ளது.
இதற்கிடையே பிச்சை பிள்ளை அந்த மர்ம நபரிடமிருந்து கைப்பேசி எண்ணை வாங்கியுள்ளார். வயதான தாத்தா என்ன செய்யப் போகிறார் என்ற நம்பிக்கையில் மர்ம நபர் கைப்பேசி எண்ணைக் கொடுத்துள்ளார். மாந்திரிகம் செய்ய வேண்டும் என்று கூறி நகை மற்றும் பல்வேறு பொருள்களைப் பாட்டியிடமிருந்து வாங்கிக்கொண்டு மர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, பிச்சை பிள்ளை மர்ம நபரைக் கைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு மர்ம நபர் தான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், நேரம் கழிந்தும் அவர் வராததால் மீண்டும் அவரது கைப்பேசி எண்ணிற்கு அழைத்துள்ளார். ஆனால், அவரது கைப்பேசி எண்ணானது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த பிச்சை பிள்ளை இது குறித்து இரும்புலிக்குறிச்சி காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், காவல்துறையினர் மர்ம நபரின் கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தொட்டியத்தைச் சேர்ந்த வடிவேல் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இரும்புலிக்குறிச்சி காவல்துறையினர் வடிவேலுவை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..