திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே பட்டமந்திரி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில், கடந்த மார்ச் 18ஆம் தேதி சிலர் மது அருந்த வந்துள்ளனர். அப்போது, அவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதை கேட்க வந்த டாஸ்மார் ஊழியர் பிரேம்நாத்தை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, பின்னர் டாஸ்மாக் கடையில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றதாக கூறப்பட்டது. அதில், பலத்த காயமடைந்த பிரேம்நாத், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், மர்ம கும்பல் டாஸ்மாக் கடையில் ஊழியரை அரிவாளால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், முதலில் ஊழியர் பிரேம்நாத்தை மதுபாட்டிலால் தாக்குவதும், அதனைத் தொடர்ந்து 3 நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் ஊழியரை சரமாரியாக தாக்குவதும், மேலும் 2 நபர்கள் கடை உள்ளே சென்று பணம், செல்போன் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லுவதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பிரசாந்த், ஹரிஷ், ஹரிபிரசாத், சிவநேசன், லோகேஷ், உதயகுமார், பாரதிராஜன், கார்த்திக் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், அவர்களில் 5 பேருக்கு கை முறிந்ததுள்ளதாகவும், முன்பகையா அல்லது திருட்டிற்காக நடந்த தாக்குதலா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.