சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், மாற்று திறனாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள நான்கு சதவீத இடஒதுக்கீட்டில் ஒரு சதவீத இடஒதுக்கீட்டை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்து ஐந்து நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் இடஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியீட்டு 9 மாதங்கள் ஆகிய நிலையில், இதுவரை அதற்கான நடவடிக்கை அரசு மேற்கொள்ளவில்லை எனக்கூறி தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று(பிப்.16) சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமர்ந்தும், படுத்துக்கொண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கிண்டியிலிருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் சென்ற வாகனங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதையடுத்து, அரை மணிநேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அடையார் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காததால், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அருகில் இருந்த சமுதாய நலக்கூடங்களில் அவர்களை அடைத்தனர். முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை அப்புறப்படுத்தும் போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பானது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; கோரிக்கை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு - விசாரணை தேதி தள்ளிவைப்பு!