சென்னை: சென்னை, அம்பத்தூர் கள்ளிகுப்பம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் என்கிற அஜய் (26). இவர் கடந்தாண்டு செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் போடப்பட்டு 1 வருடமாக சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி குண்டாஸ் முடிந்து அஜித் வெளியே வந்துள்ளார்.
இதனையடுத்து, சிறையிலிருந்து வெளியில் வந்த அன்றைய தினமே இருசக்கர வாகனம் ஒன்றை திருடியுள்ளார். அந்த இருசக்கர வாகனத்தைக் கொண்டு, அம்பத்தூர் திருவேங்கடம் நகரில், பூ வியாபாரம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து, செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்துள்ளார்.
தொடர்ந்து, மார்ச் 4ஆம் தேதி, அம்பத்தூர், ஞானமூர்த்தி காந்தி தெருவில் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளார். மேலும், இந்த இருசக்கர வாகனத்தை வைத்து, மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதிகளில், அம்பத்தூர், ராமாபுரம் சன்தாரியா நகரில் 4 செல்போன்களையும், புதூர் பானு நகரில் 2 செல்போன்களையும் வழிப்பறி செய்துள்ளார். மார்ச் 8ஆம் தேதி புதூர், விஜயலட்சுமிபுரத்தில் உள்ள அன்பு நாயகம் தெருவில், செல்போன் ஒன்றையும், ரூ.3 ஆயிரம் பணத்தையும் வழிப்பறி செய்துள்ளார்.
அம்பத்தூர் பகுதியில் தொடர் வழிப்பறி புகார்கள் வந்துள்ளது. இதனால், ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பெயரில், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் கிரி அறிவுறுத்தலின்படி, அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சத்யன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதன் அடிப்படையில், தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு பதுங்கி இருந்த அஜித் என்பவரை, தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடமிருந்து 8 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் 14வது நாளாக போராட்டம்..10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு!