சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு தமிழக முழுவதும் இன்று (பிப்.18) சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் கூறுகையில், “அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஜனவரி நாலாம் தேதி கல்லூரி வாயில்களில் முழக்கப் போராட்டமும் மாநிலம் தழுவி அளவில் ஜனவரி 30 ஆம் தேதி கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் போராட்டமும் நடத்தினோம்.
ஆனால், கோரிக்கைகள் எதையும் அரசு செவிசாய்க்காமல் உள்ளது. எனவே சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று மாபெரும் மறியல் போராட்டத்தினை உதவிப்பெறும் கல்லூரி ஆசிரியர்கள் நடத்தி வருகின்றோம். மேலும், எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத நிலையில் வரும் 23ஆம் தேதி முதல் இணை இயக்குநர் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளோம்.
அரசு உதவி பெறும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கியது போல் பணி மேம்பாடு மற்றும் பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின்படி எம்பில் பிஎச்டி பட்டங்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். இணைப் பேராசிரியர் நிலையில் 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பேராசிரியர் பணி வழங்கிட வேண்டும்.
இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்குக் கணக்கு தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் மொழி தேர்வு தேர்ச்சியை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்களுக்குத் தமிழ் மொழி தேர்ச்சி பெறுவது விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: அரசுத் துறையை விடுத்து 30,000 நபர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? - மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!