சென்னை: செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த தனியார் மருத்துவமனை மருத்துவரை திருமங்கலம் போலீசார் திருப்பதியில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை முகப்பேரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பவர் கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த உல்ஹாஸ் பாண்டுரங்கி (58). இவர் வளரசவாக்கத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக, இதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது!
இதையடுத்து, பாதிக்கபட்ட செவிலியர் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் மருத்துவரை போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், விசாரணைக்கு வரமால் இருந்ததையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவர் உல்ஹாஸ் பாண்டுரங்கி திருப்பதியில் மறைந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் திருப்பதி விரைந்த போலீசார், மருத்துவரை திருப்பதியில் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தனியார் மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மருத்துவ வட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்