சேலம்: டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் தனிப்படை போலீசார் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு அவர்கள் சென்று பார்த்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் ஆகிய போதை பொருட்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் பெங்களூரு பகுதியில் இருந்து போதை பொருட்களை இங்கு கொண்டு வந்து, பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு சென்று போதை பவுடரை விற்பனை செய்யும் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது போலீசார் தேடுவதை அறிந்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பி மீண்டும் சேலத்திற்கு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் சேலம் வந்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... 25 வயதான இளைஞருக்கு ஐந்து ஆண்டு சிறை..! தஞ்சை கோர்ட் அதிரடி!
இந்த நிலையில் சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் அந்த கும்பல் மெத்தம்பெட்டமைன் போதை பவுடரை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் போது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், பெங்களூருவை சேர்ந்த கோவிந்தராஜ், லோகேஷ், சேலம் செவ்வாய்பட்டையை சேர்ந்த விக்னேஷ், குகை பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1 லட்ச ரூபாய் மதிப்பிலான 6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பவுடர், 3 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த மெத்தம்பெட்டமைன் போதை பவுடரால் பெரும்பாலான மாணவர்கள் ஈர்க்கப்படுவதால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்