தேனி: சிவகங்கை மாவட்டத்திலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த மூவர் மற்றும் கஞ்சாவை வாங்க காத்திருந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து நான்கரை கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கொண்டு வர பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி போலீசார் வழக்கம்போல், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த மதுரை மாவட்ட பதிவு எண் கொண்ட வாடகை காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது, காரில் இருந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜதுரை(29) மற்றும் பன்னீர்செல்வம்(23) இருவரும் காரை விட்டுத் தப்பியோட முயற்சி செய்துள்ளனர். ஆனால், இருவரையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப் பிடித்து முழுமையாக சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், காரில் நான்கரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கார் ஓட்டுநர் மணிகண்டன் உட்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காரில் கடத்தி வந்த கஞ்சாவை தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த சௌவிய சஜி(20), சந்தான முத்து(24) என்ற நபர்களுக்கு விற்பனைக்காக கொடுக்கச் சென்றது தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கஞ்சா வாங்க காத்திருந்த நபர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 5 இளைஞர்களையும் கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்