சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை முட்டுக்காடு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவதும், அதனால் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனைத் தடுக்கும் பொருட்டு நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில், ஆய்வாளர் நட்ராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முட்டுக்காடு பகுதியில் ரேசில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சங்கரன்கோவிலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை!
தொடர்ந்து, ரேசில் ஈடுபட்ட 15 பேர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் முதல் 19 லட்சம் வரையிலான விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்தும், ஆய்வாளர் நட்ராஜ், பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களுக்கு அறிவுரை கூறி, இனிமேல் பைக் ரேசில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, காவல் நிலைய பிணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.