ஈரோடு : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில், இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில், 3-வது மகள் (16) ஈரோட்டில் உள்ள மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மகள் வேலைக்கு செல்வதால் பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த செல்போனில் இன்ஸ்டாகிராம்-ஐ டவுன்லோடு செய்து தனது புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை சிறுமி பதிவேற்றம் செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் வாயிலாக சிறுமிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் உறவினர் இறப்பு சம்பந்தமாக வெளியே சென்ற நிலையில், வேலைக்கு செல்வதாகக் கூறி சென்ற சிறுமி வேலைக்கு போகாமல் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட இளைஞருடன் பர்கூர் மலைப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஜாலியாக ட்ரீப் சென்றுள்ளார்.
செல்லும் வழியில் இருசக்கர் வாகனம் விபத்துக்குள்ளானதில், சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பர்கூரில் இருந்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல் நிலை மோசமாக இருப்பதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க : மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடையா? ஐகோர்ட் உத்தரவு!
பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றபோது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எடுத்து சென்ற போது, தங்களின் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பெற்றோர்கள் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் கூறுகையில், "போலீசார் என்னுடைய மகளின் செல்போனில் இருந்து போன் செய்து விபத்து ஏற்பட்டு விட்டது என கூறினர். ஆனால் தற்போது செல்போன் அங்கே இல்லை என கூறுகின்றனர். மேலும், மகள் கொண்டு சென்ற கைப்பை எதுவும் இல்லை என்று கூறுகின்றனர்.
இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் நிலையில், வாகனத்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதை ஓட்டி சென்ற இளைஞருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் இன்று காயம் ஏற்பட்டதாக கையில் கட்டு போட்டு இருக்கிறார்.
இதனால் எங்களின் மகளின் இறப்பில் பல்வேறு சந்தேகம் இருக்கிறது. போலீசார் மற்றும் மருத்துவர்கள் உரிய விசாரணை நடத்தி இறப்பின் உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். போலீசார் மகள் இறப்பில் சில உண்மைகளை மறைக்கின்றனர் என பெற்றோர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், சிறுமியின் உடல் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்