சென்னை: சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (44). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தனது உறவினரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கும்பகோணம் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், குமரன் வீட்டின் அருகே உள்ளவர்கள், குமரனின் வீட்டின் முன்பக்க கேட்டுகள் அனைத்தும் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து உடனடியாக குமரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் குமரன் தனது நண்பர்கள் இருவர்களிடம், தனது வீட்டிற்குள் சென்று பார்த்து வருமாறு கூறியுள்ளார்.
உடனே நண்பர்கள் குமரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், குமரன் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும், அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துபோது, வடமாநில இளைஞர்கள் போன்ற தோற்றம் உடைய இரண்டு இளைஞர்கள் முகத்தை மறைத்தவாறு, இரும்புக் கம்பியால் வீட்டின் பூட்டுகளை உடைத்து, உள்ளே சென்று பணம் மற்றும் நகைகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நங்கநல்லூரில் வேலைக்கு வந்த இடத்தில் 10 சவரன் நகைகளைத் திருடிய பெண் கைது! - Nanganallur Jewellery Theft