கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், கடந்த 2023 டிசம்பர் மாதம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், தான் 8ஆம் வகுப்பு படித்து வருகையில் உடற்கல்வி ஆசிரியர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
எனினும் இந்தச் சம்பவத்தை மறைக்கும் வகையில், வெளியில் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாணவி தரப்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியை மிரட்டியதாக மேலும் ஐந்து ஆசிரியர்கள் மீது கடந்த மாதம் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் மீது கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னரும், அவர்கள் மீது காவல்துறையோ அல்லது துறை ரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு ஒரே பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஜெண்டர் ரிவீல்' செய்து வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்! - Irfan Gender Reveal Issue