விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாமக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய ராமதாஸ், "நாங்க படிங்க, படிங்க என்கிறோம். அவங்க குடிங்க, குடிங்க என்கிறார்கள். அவர்கள் வாக்குக்கு கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு மாம்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள். பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். பெண்கள் மெஜாரிட்டி ஆண்கள் மைனாரிட்டி. பெண்கள் நினைத்தால் அரசை மாற்றி வீட்டுக்கு அனுப்ப முடியும். இன்னொரு கருணாபுரம் உருவாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். டாஸ்மாக் கடை இல்லாமல் சந்து கடைகள் மூலமாக கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நீங்கள் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் எந்தெந்த சாதியில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது தெரிந்துவிடும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் பாளையங்கோட்டை சிறையில் மட்டும்தான் அடைக்கப்படவில்லை. சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது என்னுடன் 1 லட்சம் கொசுக்கள் வசித்தது. நான் சிறை சென்றது உங்களுக்காக மட்டுமே.
பெண் குழந்தைகளை பெண் என்று சொல்லாதீர்கள் பெண் தெய்வம் என்று அழையுங்கள். பெண்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ரூ.2000 கொடுத்தால் போதாது என்று நீங்கள் கூறினால் அவர்கள் குறைந்தது ரூ.5000, ரூ.10,000 கேட்டாலும் கொடுப்பார்கள். ஏனெனில் அப்பணம் மது வருவாய் மூலம் அவர்களுக்கே திருப்பி வரும் என்று அவர்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தில் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, மாவட்டத்தலைவர் புகழேந்தி, மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் பாஜக இரண்டாவது இடம்"- மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!