தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி பாமக மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் அரை நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை முதல் தருமபுரி நகர்பகுதி உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள், வணிகர் உள்ளிட்டோர் கடையடைப்பு செய்திருந்தனர்.
இது குறித்து பாமக கவுரவ தலைவரும், பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி, தருமபுரி ஏம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க இருந்தனர். அப்போது அங்கு வந்த தருமபுரி ஏடிஎஸ்பி ஸ்ரீதரன், டிஎஸ்பி சிவராமன் ஆகியோர் இங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கூடாது எனவும், மீறினால் பிக்கப் செய்யப்படுவீர்கள் என மிரட்டினர்.
பின்னர் வன்னியர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, "தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பாக அரை நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கு தருமபுரி மாவட்ட வியாபாரிகள், அனைத்து வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதனால், இந்த போராட்டம் நுாறு சதவீதம் வெற்றியடைந்தது. இரு காவல் அதிகாரிகள் எங்களை மிரட்டியதுடன், பேட்டி எடுக்க காத்திருந்த செய்தியாளர்களின் மைக்கை தள்ளி விட்டு மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
தருமபுரி மாவட்டம் மழையளவு குறைந்த மாவட்டம் ஆகும். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளைப் பாதுகாக்க காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இதையும் படிங்க : சனாதன விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்! மேலும், இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் கையெழுத்து இட்டுள்ளனர். இது தமிழக அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நானும், வெங்கடேஸ்வரனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களிடம் உங்களின் முக்கிய 10 கோரிக்கைகள் என்ன என்று கேட்ட போது, நாங்கள் இருவரும் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தோம். தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் போதிய பருவமழை இல்லாததால் தற்போதே வறட்சி ஏற்பட்டு மானாவாரி பயிர்கள் காய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று நடந்த கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளதால் இது மக்கள் விரும்பும் முக்கிய திட்டம் ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கடந்தாண்டு காவிரியில் இருந்து 160 டிஎம்சி இந்தாண்டு 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இந்த திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் எந்த தடையும் விதிக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் காவிரியில் இருந்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரில் 2.5 டிஎம்சி தண்ணீர் தான் நாம் எடுக்கவுள்ளோம்.
எனவே, தமிழக அரசு காவிரி உபரி நீர் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழகத்தில் காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதே போன்று தென்பெண்ணை ஆற்றிலும் தடுப்பணை கட்டுவதன் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
பின் தங்கிய மாவட்டத்தை முன்னேற்றுவது அரசின் கடமையாகும். தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றினால், வெளி மாநிலத்துக்கு வேலைக்கு செல்லும் நிலை மாறும். விவசாய தொழில் வளர்ச்சி அடையும்" எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கூறியதாவது, "காவிரி உபரி நீர் திட்டத்தை வலியுறுத்தி பாமக அழைப்பு விடுத்த அரை நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்