திருப்பத்தூர்: நாட்றம்பள்ளியில் பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி கொலை மிரட்டல் விடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி மீது நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (38). பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியான இவர், ஏற்கனவே நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இதனையடுத்து, அப்பெண் காவலர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்திற்கு மாறுதலாகிய நிலையில், அவர் சில மாதங்களாக பாஸ்கருடன் பேச்சுவார்த்தையை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், “மீண்டும் தன்னுடன் பேசவில்லை என்றால் வேலை செய்ய விடாமல் செய்து விடுவேன். நீ தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு உன்னை கொண்டு செல்வேன். மேலும், அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் அவதூறாக பரப்புவதாக” பெண் காவலரில் செல்போனிற்கு குறுஞ்செய்தி மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பெண் காவலர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாட்றம்பள்ளி காவல்துறையினர், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'அரசியலில் நுழைபவர்களை வரவேற்போம்..குடும்ப அரசியலுக்கும் முக்கியத்துவம் கிடையாது' - குலாம் நபி ஆசாத் பிரத்யேக பேட்டி! - Ghulam Nabi Azad