விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது ஜனநாயக கடமையைச் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திண்டிவனம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாக்கினைச் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும் போது, "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று எங்களுக்கு சாதகமான ஒரு அமைதி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். மக்கள் மனதிலே ஒரு மாற்றம் வர வேண்டும் என்று ஒரு ஆழமான ஒரு எண்ணம் இருக்கிறது. தற்போது வரை எங்களுக்குத் தேர்தல் தொடர்பாக எந்த ஒரு பிரச்னையும் வரவில்லை என்ற தகவல் வந்துள்ளது.
அரக்கோணம் தொகுதியில் கட்டு கட்டாக பணத்தைப் பிடித்திருக்கிறார்கள். அது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். இருப்பினும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் விதிமீறல்கள் சட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, பணம் கொடுத்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் இது ஒரு வழக்கமாக மாற்றி விட்டார்கள். மக்களும் அதற்கு பழகிட்டார்கள். அதனால் தமிழ்நாட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. யார் பணம் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக தான் தற்போது தேர்தல் நடைபெறும்.
ஆனால், இந்த தேர்தலைப் பொறுத்தவரை, பணம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மக்கள் வாக்களிப்பது உறுதி. யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்று கேட்டாலும் மக்கள் அமைதியாக சிரித்துக் கொண்டே செல்கிறார்கள். கடந்த 57 ஆண்டு காலமாக தமிழகத்தை இரண்டு கட்சிகள் ஆட்சி செய்தது போதும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
முன்னதாக, தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் பலர் திண்டிவனம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினர்.
இதையும் படிங்க: 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்..தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களித்து நெகிழ்ச்சி!