விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 86வது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் அருகேயுள்ள கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வளாகத்தில் 86 மரக்கன்றுகளை நடவு செய்து, தனது பிறந்தநாள் விழாவை கல்லூரி மாணவ மாணவியர்களுடன் இனைந்து கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியினை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது துணைவியார் சரஸ்வதி மற்றும் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோருடன் கண்டு ரசித்தார். தொடர்ந்து விழா மேடையில் பேசிய ராமதாஸ், "தமிழகத்திற்கு அருகே உள்ள கேரள மாநிலத்தில் வாழ்ந்துவரும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் சீலை அணியக் கூடாது. இதுமட்டுமல்லாது இந்த சாதியினரை, உயர் சாதியினர் 20 அடி தூரத்தில் கண்டாலே தலை மூழ்கும் வழக்கம் இருந்தது.
அப்போது அவர்களுக்காக தோன்றிய நாராயண குரு என்பவர் அவர்களுக்கு கல்வியை கற்றுத் தந்தார். அவையெல்லாம் மாறி தற்போது மத்திய அரசின் மிகப்பெரும் பொறுப்புகளில் எல்லாம் அந்த குறிப்பிட்ட சாதியினரே உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அந்த சாதியினரில் இருந்து நான்கு பேர் முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளனர்.
ஆனால் இங்கே நல்லா குடிங்க, குடித்தால் உங்கள் சாதி முன்னேறிடும். எவ்வளவு வேண்டுமானாலும் நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.எல்லாம் நாங்கள் தாராளமாக உற்பத்தி பண்ணுகிறோம், குறையில்லாமல் செய்கிறோம் என்று குடிக்க வைக்கின்றனர்.
கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து 35 நிமிடங்கள் நான் பாடமெடுத்தேன். மேலும் அப்போது, இந்த மக்களுக்கு உங்களைவிட்டால் யார் செய்வாங்க? என்று கேட்டேன். அதற்கு அவர் தலையை மட்டும் அசைத்தார்.
மேலும், 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்பது எனக்கு அவமானமாக உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேட்கச் சொல்கிறார். அப்புறம் எதற்கு இவர் முதலமைச்சராக இங்கு உள்ளார்?" என்று கேள்வி எழுப்பினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமி பதில்!