தருமபுரி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று சௌமியா அன்புமணிக்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "தருமபுரி மாவட்ட, மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் மருத்துவர் அன்புமணி. அவருடன் இணைந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக எடுத்துச் செல்வதற்கு சௌமியா அன்புமணி உறுதுணையாக இருப்பார்.
2004 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். அதனால்தான் கிருஷ்ணகிரி புதிய மாவட்டமாக உருவானது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களாக இருந்ததை 38 மாவட்டங்களாக உருவாக்கினேன். பெரிய மாவட்டங்கள் பிரிந்து சிறு சிறு மாவட்டங்களாக இருந்தால் வளர்ச்சி அதிகரிக்கும். தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை என்னும் பாதக செயல்கள் அன்று அரங்கேறியது. இன்றும் இந்த மாவட்டத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இதை முற்றிலும் தடுப்பதற்கு சௌமியா அன்புமணி பாடுபடுவார்.
தொடர்ந்து பேசிப அவர், தருமபுரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் அதிகமாக மருத்துவர்களாக உருவாகின்றனர். பெண்களுக்கு சம உரிமை, சம பங்கு, சம அந்தஸ்து வழங்க வேண்டும்." வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவோம் விடமாட்டோம். பாமக நாடாளுமன்ற வேட்பாளர்களில் 10 பேரில் மூன்று பேர் பெண்கள் உள்ளனர் மற்ற கட்சிகளை காட்டிலும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் பாமகவில் வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடியில் புளோரைடு கலந்த தண்ணீரை குடித்து வந்ததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதை தடுப்பதற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தருமபுரியில் இருந்து ஓசூர் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
அதற்குபின் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது காவிரி உபரி நீர் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். மிக மிக பிற்படுத்தப்பட்ட தருமபுரி மாவட்டம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைவதற்கு அன்புமணி ராமதாஸ் கொண்டுவந்துள்ள முக்கிய திட்டங்கள்தான் என்றார்.
மேலும் தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை சேர்த்து இந்தியா முழுவதும் 401 நாடளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று பிரதமர் மோடியை மூன்றாவது முறை பொறுப்பேற்பார். உலகத் தலைவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டு பார்க்கும் பெரிய தலைவராக மோடி உள்ளார்" என்றார்.
இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "உலக மேடைகளில் பெண் உரிமைகள் மற்றும் பெண்களுக்காக குரல் கொடுத்தவர் வேட்பாளர் சௌமியா அன்புமணி. தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெற மருத்துவர் ராமதாஸ் 44 ஆண்டு காலம் இங்கு வருகை புரிந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
பலமுறை பாமக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. யாருடன் கூட்டணி அமைத்தாலும் எங்களுடைய கொள்கையில் எள்ளளவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. திமுக மற்றும் அதிமுகவினரை மாறி மாறி முதலமைச்சராக கொண்டு வந்தது தான் நாங்கள் செய்த தவறு. நாங்கள் செய்த தியாகத்தால் தான் எடப்பாடி பழனிசாமி இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக இருக்க முடிந்தது.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததே 10.5 சதவீத உள் ஒதுக்கீடுகாகத்தான். எடப்பாடி ஒரு வியாபாரி அவருக்கு சமூக நீதியோ மக்கள் நலனோ, மக்கள் மீது உணர்வு இல்லை.
அரைகுறையாக கடைசி நேரத்தில் இட ஒதுக்கீடு கொடுத்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது.
பிரதமரோ, பாஜகவினரோ எங்குமே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை" என்றார் . பிரச்சார பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து!