விழுப்புரம்: 18வது நாடாளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு ஒரே கட்டமாக இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரேதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக காலை முதல் தேர்தல் மையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடியில் காலை 8.33 மணியளவில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார். இதேபோல, முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரும் எடப்பாடி கே.பழனிசாமியும் சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 8.00 மணியளவில் வாக்காளித்தார்.
இதே போல் திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவிபெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி பாமக வேட்பாளர் சௌமிய அன்புமணி ஆகியோரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
வாக்கு செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸிடம் தமிழகத்தில் நிறைய இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள் அதற்கு "அது கடவுளுக்குதான் தெரியும்.. காசேதான் கடவுளடா அந்தக்கடவுளுக்கும் அது தெரியுமடா.. எனக்கு வந்த தகவல்படி நியாயமாகவே தேர்தல் நடைபெறுகிறது. மாலை வரை காத்திருப்போம்" என்றார்.
இதையும் படிங்க: உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் எப்படி இருக்கு? ஆன்லைனில் அறியலாம்!