விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ள தைலாபுரம் தோட்டம் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) இட ஒதுக்கீட்டில் ரோகினி ஆணையம் பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கபடாதது வேதனை அளிக்கிறது. 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை 150 சாதியினர் மட்டும் அனுபவிக்கின்றனர்.
994 சாதியினருக்கு 2.64 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே கிடைப்பதால் ரோகினி ஆணைய பரிந்துரையை தாமதப்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும். காவிரியில் போதுமான அளவு நீர் திறந்து விடாததால் போதுமான அளவு குறுவை சாகுபடி செய்யவில்லை. 5 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய நிலையில், ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசின் செயல்பாட்டை பாமக கண்டிக்கிறது.
காவிரி மற்றும் அதன் துணை ஆற்று அணையை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இது தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்கேட்டினால் பல கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். காவல் அதிகாரிகளை மாற்றுவதன் மூலம் மட்டுமே சட்ட ஒழுங்கினை பாதுகாக்க முடியாது.
தமிழக அரசும் ஆளுநரும் மோதலை கைவிட்டு துணை வேந்தரை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். தமிழகத்தில் துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வருகிறது. மூத்த அமைச்சர்கள் இருக்கும்பொழுது ஏன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், "அது அவர்கள் கட்சியின் முடிவு.
அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இதில் கருத்து கூற விரும்பவில்லை" என்று தெரிவித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் நல்லாட்சி தொடர்கிறது என்று கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, "நடப்பது நல்லாட்சியாக இருந்தால் நான் ஏன் வியாழக்கிழமை தோறும் ஒன்று, இரண்டு, மூன்று என கோப்புகளை படித்து மேற்கோள் காட்டி வருகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: கோவையில் மூன்றாம் இடம் பிடித்ததற்கு என்ன காரணம்? ஈபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை! - AIADMK executives meeting