சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ந.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதனால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (ஜூலை 13) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்ததியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்த தேர்தலில் பணம், பொருளைக் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக பெற்றது உண்மையான வெற்றியல்ல.
ஒரு பைசா செலவில்லாமல் பாமக 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. இதுதான் உண்மையான வாக்கு. எங்களுக்கு உறுதுணையாக இருந்த அண்ணாமலை, டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு நன்றி. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக 6 ஆயிரம் ரூபாய் பணமும், 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களையும் கொடுத்துள்ளார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதலமைச்சரின் நிர்வாகத்திற்கான வெற்றி கிடையாது. அவர்கள் கொடுத்த பணத்திற்கான வெற்றி. இதில், பாமகவிற்க்கு மிகவும் நேர்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. பணப்பட்டுவாடா நடைபெற்றது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? தேர்தல் அதிகாரிகள் அனைவரும் அப்பதவிக்கு தகுதியற்றவர்கள். தமிழ்நாட்டுக்கு தேர்தல் ஆணையம் தேவையா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நேர்மையாக பணியாற்ற முடியாவிட்டால் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பணியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும். தமிழகம் முழுவதும் மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளார்கள். விழுப்புரத்தில் சமீபத்தில் 11 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளார்கள். அதை திமுக மூடி மறைத்துள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா போதை அதிகமாக உள்ளது. அதற்கு முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை. திமுகவிற்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது. முதலமைச்சருக்கு சமூக நீதி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. பல்வேறு மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பறவைகள், விலங்குகள், பேருந்து செல்லக்கூடிய மாணவர்களை கணக்கு எடுக்கிறீர்கள்.
சாதிவாரி கணக்கு வேண்டாம் என்றால் Social justice survey என்று கூறி கணக்கெடுங்கள். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி போரட்டங்களை நடத்த உள்ளோம். கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடாதது மிகப்பெரிய துரோகம். மாநில அரசு இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்க வேண்டும். கர்நாடகா முதலமைச்சர் சந்திக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, விழுப்புரத்தில் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பணத்தை வாரி இரைத்து வெற்றி பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியின் அதிகாரம், அத்துமீறல்களை கண்டுகொள்ளவில்லை.
இதனால் இத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளது. வாக்காளர்களை மயக்கி தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவினர் தோல்வி பயத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ரூ.5 ஆயிரம் கொடுப்பதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுகவின் அன்னியூர் சிவா அமோக வெற்றி.. பாமக, நாதக வாங்கிய வாக்குகள் என்ன?