சென்னை: ஏழு கட்டங்களாக நடைபெறும் நாட்டில் 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் இம்மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நான்கு முனைப் போட்டியாக அமைந்துள்ள கூட்டணிகள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரதமர் மோடி மீண்டும் இம்மாதம் 9ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காகத் தமிழகம் வருகிறார். இந்த வருகையின் போது சென்னையில் சாலை பேரணி (ரோடு ஷோ) நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே பல்வேறு பணிகளுக்காகத் தமிழகம் வருகைதந்த பிரதமர் மோடி, அண்மையில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், கன்னியாகுமரி, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, பின்னர் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்றார். குறிப்பாகக் கோவையில் கடந்த மாதம் சாய்பாபா காலணி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ தூரம் சாலை பேரணியை நடத்தினார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் வினோத்.பி.செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த இரண்டு தொகுதிக்கும் பொதுவான இடத்தில் சாலை பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பொதுவான இடங்களான மேற்கு மாம்பலமும் மற்றும் பாண்டி பஜார் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் சாலை பேரணி நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னை வரும் பிரதமர் மோடி வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவுடனான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இம்மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளத் தமிழகம் வருகை தர உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களும் விரைவில் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக தேர்தல் பிரசார களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் முறையாக செயல்பட்டிருந்தால் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடந்திருக்கும்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!