சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 04) மாலை நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடையில் சென்னை மக்களுக்கு வணக்கம் என பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு முறை நான் சென்னைக்கு வரும்போதும் இங்கு உள்ள தமிழர்களால் எனக்கு ஒரு சக்தி உண்டாவதுடன், உழைப்பும் துடிப்பும் நிரம்பி இருக்கும் இந்த சென்னை நகருக்கு வருவது மிக இனிமையான அனுபவமாக உள்ளது.
ஆனால், இங்கே சில ஆண்டுகளாகவே நான் தமிழகம் வரும் பொழுது சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அதற்குக் காரணம், பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான். விரைவில் இந்தியாவை உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக ஆக்க வேண்டும். அதில் தமிழகத்தின் சென்னையின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும்.
ஒரு புறம் மத்திய அரசு தமிழகம் மற்றும் சென்னையின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. மறுபுறம் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு சென்னை மக்களின் தேவைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. புயல் மற்றும் மழை வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளில் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
ஆனால், அவதிப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ள தடுப்பு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளாமல் ஊடக மேலாண்மையை அவர்கள் செய்து வந்தனர். ஊடகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பாலும் தேனும் ஓடுவதாகவும் வெள்ள நீர் எங்கும் ஓடவில்லை எனவும் அவர்கள் பேட்டி அளித்து வந்தனர்.
மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றி வருகிறது. இதற்காகப் பல திட்டங்களுக்கான தொகையை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறது. இப்படி நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் சென்றடைவதால், லட்சக்கணக்கான கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க முடியாமல் இருக்கிறதே என்பதுதான் திமுகவிற்கு மிகப்பெரிய வருத்தம்" என்று அவர் திமுகவை சாடினார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "திமுகவிற்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தைக் கொள்ளை அடிக்க விடமாட்டேன். எந்த பணத்தை நீங்கள் கொள்ளை அடித்தீர்களோ அந்த பணம் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும் இது மோடியின் உத்தரவாதம்.
திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் மட்டுமல்ல இந்தியா கூட்டணியில் உள்ள மேலும் பல கட்சிகள் குடும்பத்துக்கே முதல் உரிமை என்றும் கூறி வருகின்றனர். ஆனால், என்னுடைய நோக்கம் தேசத்திற்குத்தான் முதல் உரிமை இதனைக் கூறுவதால்தான் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்னைக் குறை கூறி வருகின்றனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் அனைவரும் என்னுடைய சொந்தங்கள். குடும்ப அரசியல் என்பது அகங்காரம், மமதை, திமிர்த்தனத்தை வெளிப்படுத்துகிறது. குடும்ப அரசியல் வழிவந்த உறுப்பினர் ஒருவர், அதிகாரத்தின் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் நாட்டையும் நாட்டு மக்களையும் அடிமைகளாகக் கருதுகிறார். அவர்களது பதவிக்கான கண்ணியத்தையும் மரியாதையும் கூட அவர்கள் மறந்து விடுகின்றனர்.
அதிலும், குறிப்பாக திமுகவின் அமைச்சர் ஒருவரிடம் உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி மிதிப்பதும் கூட குடும்ப அரசியல் நடத்துபவர்களின் லட்சியம் அடையாளம்.
குறிப்பாக என்னுடைய மனதில் அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், தமிழகத்தில் போதைப் பொருட்கள் தங்கு தடை இன்றி அணைத்து இடங்களிலும் கிடைத்து வருகிறது. இது என்னுடைய மனதிற்கு மிகவும் கவலையாக இருந்து வருகிறது. உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் கட்சிக் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாளைய தலைமுறைகளையும் இந்த போதைப் பொருள்கள் அழித்துவிடும் இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் தமிழகத்தின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும் இது மோடியின் உத்தரவாதம்" என்று உறுதியளித்துப் பேசினார்.
இதையும் படிங்க: தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு எப்படிக் கொடுத்தீர்கள்? சின்னம் ஒதுக்கீடு குறித்து சீமான் சரமாரி கேள்வி!