சென்னை: நாளை சென்னையில் நடைபெற உள்ள அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வர உள்ள நிலையில், அது குறித்து தமிழில் பதிவிட்டு உள்ளார். இது தொடர்பாஹ, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “நான் நாளை, மார்ச் 4ஆம் தேதி சென்னையில் இருப்பேன். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நகரில் தமிழ்நாடு பாஜக நடத்தும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளேன்” என பதிவிட்டு உள்ளார்.
சென்னையில் பிரதமர் மோடி: கல்பாக்கத்தில் புதிய திட்டம் தொடக்கம் மற்றும் சென்னை பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படையின் தனி விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, நாளை மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, பிரதமர் மோடி சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.
இதனையடுத்து, மாலையில் மீண்டும் தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, தெலங்கானா மாநிலம் பேகம்பட் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி வருகையால், சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், காவல் இணை ஆணையர்கள், காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம் ஒழுங்கு குற்றப் பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், 144-ன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழா நடைபெறும் ஒஎம்சிஏ மைதானத்தைச் சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து, மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை; முழு பயண விவரம்!