திருநெல்வேலி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மோடி வருகை தரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பின், 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என கூறப்படுகிறது.
இதை அடுத்து குலசேகரப்பட்டினம் பகுதியில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கான திட்ட பணிகளை மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் எனவும் 550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்க மோடி வருவதை ஒட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான இடங்களை பிடிக்க வேண்டும் என்பதை பாஜக தலைமை தீவிரம் காட்டி வரும் நிலையில், தென் மாவட்டங்களை குறிவைத்து பாஜக களமிறங்குவதற்காக மோடி வருகை தருகிறார் என கூறப்படுகிறது.
இன்று முதல் பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் சோதனை நடத்த உள்ளனர்.கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடலில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நெல்லையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் பாஜக அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..
இதையும் படிங்க: இலவச பயணத் திட்டத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.800 வரை சேமிப்பு: சிஏஜி ஆய்வறிக்கையில் தகவல்