சென்னை: இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாக செல்வதற்காக வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வகையில், தென்னக ரயில்வே சார்பாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர், மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, திருவனந்தபுரம், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இந்த ரயில் டிக்கெட்டுகளும் வேகமாக விற்று விடுவதால், இந்த சேவைகள் அனைத்து சிறப்பு ரயில்களாகவே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை - மைசூரு இடையே கூடுதலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், இந்த சேவையை நாளை (மார்ச் 12) பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவையானது, ஏப்ரல் 4ஆம் தேதி வரை சென்னை - பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும் என்றும், ஏப்ரல் 5ஆம் தேதிக்கு மேல் மைசூரு வரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், நாளை கொல்லம் - திருப்பதி புதிய ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இவை தவிர திருவனந்தபுரம் - காசர்கோடு இடையிலான வந்தே பாரத் ரயில், மங்களூரு வரை நீட்டிக்கப்பட உள்ளது. 200க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: அமலுக்கு வந்தது சிஏஏ சட்டம்.. மத்திய அரசு அறிவிப்பு!