வேலூர்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களான, வேலூர் மக்களவை தொகுதியில் புதிய நீதி கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகம், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து பேசினார்.
மேலும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நரசிம்மன், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் ஆதரித்தும் பேசினார்.
அப்பொழுது, வணக்கம் எனத் தொடங்கி உரையை தொடங்கிய மோடி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "மூன்றாவது முறையாக நான் பிரதமராக பதவி ஏற்கும் பொழுது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டுக்காகவும் தன்னை அர்ப்பணித்து பாடுபடுவேன்.
வேலூர் வீரம் நிறைந்த மண், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில மிகப்பெரிய புரட்சிக்கு வேலூர் வித்திட்டது. இந்த 21 நூற்றாண்டில், 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் வளர்ச்சி அடைந்து உள்ளது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரம் பின் தங்கி இருந்த நிலையில் இப்போது பொருளாதாரம் உயர்ந்துள்ளது. அதில், தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. பாஜக ஆட்சி அமைத்தால், பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகும், ஒரு நவீன நகரமாக வேலூர் மாறும், உதான் திட்டத்தில் வேலூர் விமான நிலையம் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதனால் பல நாடுகளில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
திராவிட முன்னேற்ற கழகம் பழைய சிந்தனையில் உள்ளது. பழைய அரசியலை செய்து வருகிறது. நம்மை அத்தனை பேரையும் சிக்க வைக்க முயற்சிக்கிறது. திமுக குடும்ப சொத்தாக மாறி உள்ளது. கொள்ளை அடிப்பதை மட்டுமே திமுக செய்து வருகிறது. மணல் கொள்ளையில் 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. ஊழலுக்கு முன்னுதாரணமாக திமுக தான் ஒட்டுமொத்த குடும்பமே ஊழல் செய்வது தான். தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் போதை பொருள் விற்கும் கூடாரமாக மாறி வருகிறது.
இதன் காரணமாக சின்ன சின்ன பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். மக்களை பிரித்தாலும் கொள்கையில் திமுக ஈடுபட்டு வருகிறது. மதம், மொழி, சாதி ஆகியவற்றின் பெயரால் திமுக பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு வருகிறது. தமிழகத்தின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் காப்பாற்ற முடியாமல் உள்ளது. காரணம் தமிழக போதை பொருட்கள் விற்பனையில் திமுக உதவியுடன் நடக்கிறது.
இதனை நாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். திமுக குடும்பத்தின் எண்ணம், தமிழக மக்களை மொழியின், பிராந்தியம், சாதி, மதம் என பிரித்து ஆளுகிறது. ஒருநாள் மக்கள் தெளிவடையும் போது மிக பெரிய தாக்கத்தை சந்திக்கும்.ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியில் பேச முயற்சி செய்து வருகிறேன். உலக மொழியாக தமிழை மாற்ற முயற்சி செய்து வருகிறேன். காசி, சௌராஷ்டிராவில் தமிழ் சங்கம் நடத்தி இருக்கிறேன். உலக முழுவதும் தமிழை கொண்டு செல்வேன் அதனை தடுக்கும் வகையில் திமுக செயல்படுகிறது. தமிழகம், பெண் சக்தி ஆராதிக்கின்ற மண்ணாக உள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி இந்து மத சக்தியை அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு இந்த கட்சிகள் துரோகம் செய்துள்ளது. நாடு முழுவது காங்கிரஸ், திமுக பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர். அனைவருக்கும் தெரியும் கச்சதீவு தாரை வார்த்தது யார் என, மேலும் மீனவ மக்களை வஞ்சிக்கும் வகையில் காங்கிரஸ், திமுக இருக்கிறது. வேலூர் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போது தங்க கோயிலுக்கு வந்துள்ளேன்.
இந்து தர்மத்தை அழிக்கவே காங்கிரஸ், திமுக உள்ளது. அம்மா ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி எல்லாம் இழிவுபடுத்தினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களை அவமதிக்கும் கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. பெண்களை இழிவுபடுத்தி வருகிறார்கள். பெண்களின் சக்தியை நாங்கள் பாதுகாப்போம், மரியாதை மீட்டு கொடுப்போம். திமுக பெண்களை இழிவுப்படுத்துபவர்களாக உள்ளனர்.வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் மானத்தை காப்பாற்றுவதற்காகவும் எதிர்காலத்தை காப்பதற்கும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.