ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதை முன்னிட்டு 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நாட்டின் பிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாடு வந்தார். சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து திருச்சி சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார். ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து ராமநாதபுரம் சென்ற பிரதமர் மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு விரைந்தார்.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு ராமநாத சுவாமி கோயில் சிறப்பு பூஜைகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து இரவு அங்கு தங்கிய பிரதமர் மோடி இன்று (ஜன. 21) தனுஷ்கோடி சென்றார். அரிச்சன்முனையில் உள்ள ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படும் இடத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.
தொடர்ந்து தனுஷ்கோடி சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோதண்டராமர் என்பது கையில் வில்லுடன் ராமர் என அர்த்தம் கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில் தான் ராவணனின் சகோதரர் விபிஷ்ணன, ராமரிடன் அடைக்கலம் அடைந்ததாக கூறப்படுகிறது. 3
அதேபோல் இதே இடத்தில் விபிஷணனுக்கு, ராமர் மூடிசூட்டியதாக நம்பப்படுகிறது. மேலும் தனுஷ்கோடியில் இருந்து ராமர், இலங்கை வேந்தன் ராவணனை போரில் வென்றதாக நம்பப்படுகிறது. தொடர்ந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாகவும் நாளை (ஜன. 22) நடைபெற உள்ள ராமர் கோயில் பிரதிஷ்டையில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : அரிச்சல்முனையில் பிரதமர் மோடி! கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம்!