திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "வரலாற்றுப் பெருமை மிக்க நெல்லை மண் மாற்றத்தின் குரலாக உள்ளது. உங்கள் உற்சாக உங்கள் வரவேற்பு பார்த்த உடன் திமுக இந்தியா கூட்டணியினுக்குத் தூக்கமே தொலைந்து போயிருக்கும்.
நேற்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடியிருப்பீர்கள் அந்த தமிழ்ப் புத்தாண்டில் தான் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டோம் அதில் தமிழர்களின் முன்னேற்றத்துக்குப் பல நலத்திட்டங்களை உங்களுக்காகத் தந்துள்ளோம். மேலும், பல திட்டங்களைத் தர இருக்கிறோம்.
தமிழக பாரம்பரியம் உலக சின்னத்தில் இடம் பெற உள்ளது. உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் தமிழ் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறார்கள். அது செங்கோலாக இருக்கட்டும் ஜல்லிக்கட்டாக இருக்கட்டும் திமுக காங்கிரஸ் எப்படிப் பார்த்தார்கள் என நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தியா மீது பற்று வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் பாஜக தான் பிடித்த கட்சியாக இருக்கும். பாஜக எப்போது தமிழ் மொழியைத் தமிழ் மக்களை மிக நேசிக்கும் கட்சி. எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவரின் கனவுகளை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது. எம்ஜிஆரையும் திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் எவ்வளவு தேச விரோத செயல்களைச் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் உயிர் நாடியான கச்சத்தீவைத் திரைமறைவில் வேறு நாட்டிற்குக் கொடுத்து விட்டார்கள். திமுக காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை மறக்க முடியாத பாவமாக நினைக்கிறேன்.
போதையை நோக்கி தமிழ்நாடு போய்க் கொண்டிருக்கிறது. குடும்ப அரசியலில் உள்ளவர்கள் போதைப் பொருள்களை ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால் மிகப்பெரிய சோகத்தைத் தமிழகம் சந்தித்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படுகிறார்கள்.
அதிகார மிக்கவர்களின் அனுமதியோடு போதைப் பொருள் தலைவிரித்தாடுகிறது. போதைப் பொருள் என்ற விஷம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. போதை மாபியாக்கள் யாரோடு பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட செல்லும். மோடி இதை வேடிக்கை பார்க்க மாட்டேன்.
இந்த தேர்தலில், இந்த கூட்டம் தான் தமிழக மக்களை நான் சந்திக்கும் கடைசி கூட்டம். நீங்கள் முழு மனதோடு எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவைத் தருகிறீர்கள் புதிய வரலாற்றைத் தரப் போகிறீர்கள் பாஜக தமிழகத்தில் எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள். அவர்கள் அதிர்ச்சி அடையும் மாதிரி நீங்கள் பெரிய ஆதரவு தரப்போகிறீர்கள். பாஜக பிரசாரத்தைத் தடுக்கிறார்கள் அந்தளவுக்கு, திமுகவுக்கு பயமும் பதட்டமும் வந்துள்ளது.
இதையும் படிங்க: "தமிழர்களின் மொழி, கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது" - ராகுல் காந்தி!