தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடமாடும் ஸ்கேன் இயந்திரம் பயன்படுத்தி ஒரு கும்பல் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்தல் மற்றும் கருக்கலைப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, கருவின் பாலினம் தேர்வை செய்தல் தடை சட்ட மாநில கண்காணிப்பு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதில் கர்பிணிகளை பரிசோதனை செய்ய அழைத்து செல்லும் இடைத்தரகர் வனிதாவின் தொடர்பு எண்ணை வைத்து, இந்த குழு ஒரு பெண்ணை கர்பிணியாக அனுப்பி வைத்துவிட்டு, நேற்று (பிப்.2) பின் தொடர்ந்து சென்றுள்ளது. அந்தக் கும்பல் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அடுத்த பரிகம் கிராமத்தில் உள்ள புஷ்பாகரன் என்பவரின் வீட்டில் தற்காலிக முகாம் அமைத்து, இயந்திரம் வைத்து 13 பெண்களுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இவா்கள் பரிசோதனை செய்த இடம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நெட்வொர்க் இல்லாத இடம் என்பதால், இந்த இடத்திற்கு கண்காணிப்பு குழு வர தாமதமாகி உள்ளது. அதற்குள்ளாக 13 பெண்களுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்துவிட்டு, இயந்திரத்தை எடுத்துக் கொண்டு ஒருவர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
பரிசோதனை முடித்து வந்த பெண்களை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். அப்பொழுது பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வனிதா என்பர் இடைத்தரகராக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. வனிதாவை பிடித்து விசாரணை நடத்தியதில், முறையாக மருத்துவம் படிக்காத கள்ளக்குறிச்சியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவம் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் சாந்தி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். கருவின் பாலினம் குறித்து சோதனை செய்ய ரூ.13 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு கர்ப்பிணிகளை அழைத்து வருவதற்காக ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வனிதாவுக்கு கமிஷன் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் பாலினம் அறிந்து கொண்டவர்களில், கருக்கலைப்பை தேர்வு செய்யும் பெண்களுக்கு மற்றொரு நாளில் வேறொரு இடத்தில் கருக்கலைப்பு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இடைத்தரகர் வனிதா, காரின் ஓட்டுநரான முருகன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, முறையான மருத்துவம் படிக்காமல் இயந்திரம் வைத்து, பாலினம் கண்டறிந்து கூறியதாக, தலைமறைவான வடிவேலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த வடிவேல் என்பவர் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதும், இதுவரை மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த பணிக்காக வீட்டை வழங்கிய, பரிகம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பாகரன் என்பவர் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, கருவின் பாலினம் அறிந்து கொள்ள வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு போதிய அறிவுரை மற்றும் எச்சரிக்கை வழங்கி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஓட்டுநர் நடத்துநர்களுக்கு முக்கிய அறிவுரை!