தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், சங்கரசுப்பு மகன் ஆண்டியா என்ற ஆண்டிகுமார் (22). இவர் மீது செய்துங்கநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஆண்டிகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கெதிராக நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தால் வெட்டுவதாக மிரட்டும் வகையில், பின்னணியில் சினிமா பாடலை ஒலிக்க வைத்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினருக்கு ஆண்டிகுமாரின் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான வீடியோ குறித்த தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவனுக்கு, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மநாபபிள்ளை தலைமையில், உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு ஆண்டிகுமாரை கைது செய்தனர்.
சமூக வலைத்தளத்தில் மிரட்டல் வீடியோ பதிவினை வெளியிட்டு கைதான இந்த ஆண்டிகுமார் மீது, ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தப்பியோடிய போக்சோ வழக்கு கைதி: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு